நார்மல் டெலிவரிக்கு உடற்பயிற்சி உதவுமா?
கர்ப்பத்தின் போது உடற்பயிற்சி செய்தாலும், அதற்கு முன்பு வரை நம் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதும் முக்கியம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
திருமணம் ஆவதற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே யோகா, உடற்பயிற்சி செய்வது தினசரி ஒழுங்காக இருந்தால், நார்மல் டெலிவரிக்கான வாய்ப்பு அதிகம்.
நார்மல் டெலிவரியில் வலி தீவிரமாக இருக்கும். அதற்கு வாய்ப்பு இருந்தாலும், சிறிது வலி வந்ததும், என்னால் முடியாது என்று சோர்ந்து விடுகின்றனர் சில பெண்கள்.
பிரசவத்தின் போது ஏற்படும் வலியை பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு மன தைரியம், உடல் வலிமை தற்போது குறைவாக காணப்படுகிறது.
நார்மல் டெலிவரி ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில், எல்லா பயிற்சிகளையும் 'யு - டியூபில்' பார்த்து செய்வது தவறு.
இதனால் குறைப் பிரசவம், வேறு ஏதேனும் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
டாக்டரின் ஆலோசனையுடன், பயிற்சியாளரின் கண்காணிப்பில் மட்டுமே செய்ய வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எந்த உடல் பிரச்னையும் இல்லாமல் இருந்தால், ஐந்தாவது மாதத்தில், காலை, மாலையில் குறைந்தது, 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம்.
நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் தசைப்பிடிப்பைத் தவிர்க்க, நடக்கும் போது அவ்வப்போது சிறிது தண்ணீர் குடிப்பதும் முக்கியம்.
ஆறாவது மாதத்தில் யோகா செய்யலாம். நீச்சல் குளத்தில் நடைபயிற்சியும் செய்யலாம். இடப்பக்கமாக படுத்து, இரவில் 8 - 10 மணி நேரம் உறக்கம், மதியம் ஒரு மணி நேரம் ஓய்வெடுப்பது கட்டாயம்.