சமூக வலைதள விளம்பரங்களை நம்பாதீங்க: ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு துறை அறிவுறுத்தல்
சமூக வலைதளங்களில் வரும், பாரம்பரிய மருத்துவ முறை கருத்துகளை நம்ப வேண்டாம்' என, ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த கலையரசி, 19, என்ற இளம்பெண், யு டியூப் பார்த்து, உடல் எடையை குறைக்க, 'வெங்காரம்' சாப்பிட்ட நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
சமூக வலைதளங்களில், சித்தா, ஆயுஷ் மருத்துவம் சார்ந்த சிகிச்சை முறைகள் குறித்த மருந்துகள் விற்பனை செய்யப்படுவதும், பரிந்துரைப்பதும், அதிகளவில் நடந்து வருகிறது.
இதுபோன்ற விளம்பரங்களுக்கு, ஏற்கனவே, ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது.
ஆனால் ஆண்மை குறைபாடு, உடல் எடை குறைப்பு, மூலம் உள்ளிட்டவை தொடர்பாக, தொடர்ந்து சமூக வலைதளங்களில், அதிகளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முகவரி இல்லாத விளம்பரங்களை நம்ப வேண்டாம் என, ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வரும், ஆயுஷ் மருத்துவம் சார்ந்த, 'டிப்ஸ்' போன்றவற்றை கேட்டு, அப்படியே செயல்படுத்த வேண்டாம் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவர்களிடம் ஆலோசித்து மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.