வாய் உலர்வதும் மெனோபாஸ் அறிகுறியாக இருக்கலாம்
மாதவிடாய் நிற்கும் போது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால், வாய், பிறப்புறுப்பின் உட்புறத் திசுக்களிலுள்ள, 'ரிசெப்டார்ஸ்' ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளில், சில மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
இதனால், திசுக்கள் சுருங்கி, பலவீனமாகி, இயல்பைவிட மெலிதாகலாம். இதனால், வாயில் தொற்றுகள் எற்படலாம்; உமிழ் நீர் சுரக்கும் அளவு இயல்பை விட குறையலாம்.
இதன் காரணமாக, வாய் உலர்வது, உமிழ்நீர் குறைந்து விட்டது போன்ற உணர்வு, வாயில் பிசுபிசுப்பு, விழுங்குவதில், பேசுவதில் அசவுகரியம் ஏற்படலாம்.
உமிழ்நீர் சுரப்பிகள் ஹார்மோன் மாற்றங்களுக்கு உட்படுவதால், உணவின் அசல் சுவை உணரும் திறனில் மாற்றம், பல் சொத்தை ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.
அதேபோல், ஈறுகள் மற்றும் பற்களைத் தாங்கும் திசுக்களிலும் மாற்றங்கள் ஏற்படுவதால், ஈறு நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகமுள்ளது.
வாயில், நாக்கில் எரிச்சல், வாயின் உட்புறத்தில் அழற்சி, நரம்பியல் பாதிப்பு போன்ற பிரச்னைகள், வலியை உணர முடியாமை, வாயில் புண் போன்ற பாதிப்புகள் வரலாமென ஆய்வுகள் கூறுகின்றன.
மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற உளவியல் காரணிகளும், சில வாய்வழி அறிகுறிகளை அதிகரிக்கக்கூடும்.
இந்த அறிகுறிகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் கட்டாயமாக ஏற்படுமென கூறமுடியாது. ஆனால், இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் பரிசோதனை செய்வது அவசியம்.
தேவைப்பட்டால், பல் மருத்துவர், சியாலோமெட்ரி எனும் உமிழ்நீர் சுரப்பு அளவீட்டுப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.
எனவே, மாதவிடாய் நிறுத்த காலத்தில், வாயில் ஏற்படும் மாற்றங்களை அலட்சியம் செய்யக்கூடாது.