இனி... டாக்டரின் பரிந்துரையின்றி இருமல் மருந்து வாங்க முடியாது!
கடந்தாண்டு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், தமிழகத்தைச் சேர்ந்த, 'கோல்ட்ரிப்' என்ற இருமல் மருந்தை குடித்த, 24 குழந்தைகள், அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம், நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விசாரணையில், அந்த மருந்தில், 'டைஎத்திலீன் கிளைகோல்' என்ற நச்சுப்பொருள் கலந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை குடித்து, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளிலும் குழந்தைகள் உயிரிழந்தது, நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தது.
இந்நிலையில், நாடு முழுதும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், இனி இருமல் மருந்து வாங்க முடியாது என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.
இதன்படி, மருந்து விதிகள் 1945ன் கீழ், 'அட்டவணை கே' பட்டியலில் இருந்து, 'சிரப்' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இனி, இருமல் மருந்துகளை மருந்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது.
இந்த புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.