பிலிப்பைன்சின் தொங்கும் கல்லறை தோட்டம்..!
பிலிப்பைன்சில் சகாடா பகுதியில் வாழும் இகோரோட் பழங்குடியின மக்கள், இறந்தவரின் உடலை மலையில் தொங்கவிடும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக இறந்தவர்களை, ஆங்காங்கே மலைமுகடுகளில் சவப்பெட்டியுடன் தொங்கவிடும் நடைமுறையானது, பலராலும் வியப்புடன் பார்க்கப்படுகிறது.
இறந்தவர்களின் உடலானது இருந்தால்தான், அவர்களால் விண்ணகம் செல்ல முடியும் என்று அந்த மக்களின் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது.
அந்த உடலானது அழுகாமல் இருக்க பெட்டியை பல மூலிகைகளால் நிரப்புகின்றனர், பின் அதில் புகை காட்டி ஆணி அடித்து விடுவர்.
மலை உச்சியிலிருந்து இறந்தவரின் பெயரை மூன்று முறை கூறி அதனை கீழே இறக்குவதன் மூலம், முன்னோர் அவர்களை வந்து அழைத்துக் கொள்வார் என்று நம்புகின்றனர்.
மூடிய சவப்பெட்டியை திறப்பது கடவுள் குற்றம் என்று கருதும் இவர்கள், எப்போதாவது உடல் அழுகும் சூழல் ஏற்பட்டால் சவப்பெட்டியில் மூலிகை ரசாயனத்தை சொட்ட விடுவார்களாம்.
மலை உச்சியிலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் சவப்பெட்டிகள் ஓரத்தில், இறந்தவரின் பெயர் எழுதி இருப்பதைக் காணலாம்.
தாயின் கருவறையில் எந்த வடிவத்தில் இருந்தனரோ, அதே வடிவத்தில் இறந்தவர்களை சவப்பெட்டிக்குள் வைக்கின்றனர்.
அங்குள்ள மக்களுக்குப் பொருளாதார மேம்பாடு கிட்டும் வகையில் இந்த தொங்கும் கல்லறையானது ஒரு சுற்றுலாத் தலமாகவும் உருவெடுத்துள்ளது.