மூளையை செயலிழக்க செய்யும் வெப்ப வாதம்!
உடலின் வெப்ப நிலையை சீராக பராமரிக்கப்படாவிட்டால், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, வெப்பவாதம் ஏற்படுகிறது.
உடலின் உஷ்ணம் 40 டிகிரி சென்டிகிரேடுக்கும் மேல் உயர்ந்து, அதிகப்படியான வெப்பத்தை உடலால் வெளியேற்ற முடியாத போது, வெப்பவாதம் ஏற்படுகிறது.
பொதுவாக, மூளையில் உள்ள, 'ஹைபோதாலமஸ்' எனும் பகுதி, வியர்வை மூலமும், ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதன் மூலமும் உடலின் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கிறது.
அதிக வெப்பத்தில் இருப்பது, நீர்ச்சத்து குறைபாடு, தொடர்ந்து கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவது போன்ற நேரங்களில், இந்த அமைப்பு செயலிழந்து விடுகிறது.
இதன் விளைவாக செல்கள் பாதிக்கப்பட்டு, உடல் முழுவதும் வீக்கம், நரம்பியல் கோளாறுகள் ஏற்படுகின்றன.
சாதாரண தசைப்பிடிப்பில் தொடங்கி, குழப்பமான மனநிலை, தசைப் பிடிப்பு, தீவிர சிறுநீரக பாதிப்பு வரை வரலாம்.
வெப்ப வாதம் ஒருவரின் மனநிலையைப் பாதிக்கலாம். முதலில் குழப்பம், எரிச்சல், நிதானமின்மையுடன் துவங்கும். தீவிர நிலையில், வலிப்பு, நினைவிழப்பது, உயிரிழப்பும் ஏற்படலாம்.
உடல் உஷ்ணம் அதிகரிப்பது, நரம்பு செல்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை குலைக்கிறது. செல்களில் உள்ள புரதங்களின் அமைப்பு சிதைகின்றன.
மூளைத் திசுக்களில், திரவம் சேர்ந்து, வீக்கம் ஏற்படலாம். மூளைக்கு ஆக்சிஜன், ரத்த ஓட்டம் குறைந்து, ஞாபக மறதி, பக்கவாதம், நினைவிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது, சிறுமூளைப் பகுதி. இதனால் தான், வெப்ப வாதத்தில் இருந்து மீண்டவர்களுக்கு, உடல் இயக்கம் சார்ந்த பாதிப்புகள் தொடர்ந்து இருக்கும்.