இன்று ஹோலி பண்டிகை! பாரதம் முழுவதும் ஒரு ஹோலிப் பயணம்!
நாடு முழுவதும் சாதி, மதம் கடந்து மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைத் தூவி அன்பைப் பரிமாறிக்கொள்ளும் ஹோலி திருவிழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான சுவாரசியத்தைக் கொண்டுள்ளது. அவற்றை குறித்துப் பார்ப்போம்.
கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவிலும், அவர் வளர்ந்த பிருந்தாவனத்திலும் ஹோலி ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கிவிடும். இங்கே 'லாத்மார் ஹோலி' மிகவும் பிரபலம்.
பெண்கள் ஆண்களைக் குச்சிகளால் மென்மையாக அடிக்க, ஆண்கள் தற்காத்துக் கொள்ளும் இந்த விளையாட்டு, கண்ணனுக்கும் ராதைக்கும் இடையிலான காதலைக் கொண்டாடும் ஒரு மரபாகும்.
வங்காளத்தில் இது கலைகளின் திருவிழா. புகழ்பெற்ற சாந்திநிகேதன் மற்றும் நதியா பகுதிகளில், ரவீந்திரநாத் தாகூர் தொடங்கிய 'வசந்த உற்சவம்' இன்றும் உயிர்ப்புடன் உள்ளது.
பெண்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, பாடல்கள் பாடி, நடனமாடி 'குலால்' பொடியைத் தூவி வசந்தத்தை வரவேற்கின்றனர்.
பஞ்சாபில் சீக்கியர்களால் கொண்டாடப்படும் 'ஹோலா மொகல்லா' வீரத்தின் அடையாளமாகும். இங்கே தற்காப்புக் கலைகள், வாள் வீச்சு , குதிரையேற்றம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
குஜராத்தில் பானைகளை உயரத்தில் கட்டி அதை உடைக்கும் போட்டி ஹோலியின் போது நடைபெறும்.
வண்ண நீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றி விளையாடும் இந்தத் திருவிழா, இப்பகுதிகளில் 'ரங் பஞ்சமி' என்று ஐந்தாம் நாள் வரை நீடிக்கும்.