வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள் சில...

நாகரிகத்திலும், மருத்துவத்திலும் எவ்வளவு படிகள் முன்னேறினாலும், ஏதாவது சளி, தலைவலி என்றால் உடனடியாக பலரும் முயற்சிப்பது கை வைத்தியத்தை தான்.

வீட்டில் உள்ள மஞ்சள், மிளகு, வெந்தயம், துளசி மற்றும் கற்பூரவல்லி உட்பட பல்வேறு பொருட்களை கொண்டு கை வைத்தியத்திலேயே பலரும், சிறிய பிரச்னைகளை துரத்தியடிப்பர்.

எனவே, அங்குமிங்கும் தேடியலையாமல் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய ஒரு சில மூலிகை செடிகளைப் பார்ப்போம்...

மூலிகைச் செடிகளில் ஒன்றான புதினா அனைவருக்கும் பரிட்சயமானது; ஆரோக்கியம் மட்டுமின்றி புத்துணர்ச்சியையும் தருகிறது. டீ, சட்னி, சூப், ரசம் உட்பட பல வழிகளில் பயன்படுத்தலாம்.

துளசியில் உள்ள மருத்துவத்தன்மை காரணமாக மூலிகைகளின் ராணி என அழைக்கப்படுகிறது. தினமும் ஓரிரு துளசி இலைகளை அப்படியே சாப்பிடலாம். அல்லது ஹெர்பல் டீயாக போட்டு குடிக்கலாம்.

லேசான காரத்தன்மை உடைய பிரண்டை எலும்புகளை பலப்படுத்தவும், வாயுப் பிடிப்பை நீக்கவும், மூலத்துக்கான மருந்தாகவும் பயன்படுகிறது.

மண்தொட்டி, நிலம் என எங்கு வேண்டுமானாலும் எளிதாக வளரக்கூடிய கற்றாழை, உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சருமம், கூந்தல் அழகை மேம்படுத்தவும் பயன்படுகிறது.

வயிற்றுவலி, அஜீரணம், செரிமானப் பிரச்னை, மாதவிடாய் கால வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக வெந்தயம் பயன்படுகிறது. கூந்தல் வளர்ச்சியிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.

இதேப்போல் கற்பூரவல்லி, தூதுவளை மற்றும் லெமன் கிராஸ் உட்பட பல்வேறு மூலிகைச் செடிகளை எளிதாக வீட்டில் வளர்க்கலாம்.