இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்... உலகெங்கும் பலவித புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள், பலவித வழிமுறைகளில், தனித்தன்மையுடன் கொண்டாடப்படுகின்றன.

கி.மு., 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாபிலோனியர்கள், புத்தாண்டில் உழவுத் தொழிலுக்கு தேவையான கருவிகளுக்காக வாங்கிய கடன்களை திருப்பி அளிக்க உறுதி பூண்டனர்.

இதேபோல், அக்டோபர் மாதத்தில், சாம்ஹைன் எனும் புத்தாண்டு விழாவை கொண்டாடினர். இறந்தவர்களின் ஆவிகள் தொல்லை தருவதாக நம்பி, அவற்றை விரட்டுவதற்காக இவ்விழாவை நடத்தினர்.

இது, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் கொண்டாடப்படும் 'ஹாலோவீன்' விழாவின் முன்னோடியாக கருதப்படுகிறது.

கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில், வாங்கூவர் பகுதி மக்கள், குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் நீராடி, விசேஷ உடைகள் அணிந்து மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

ஐரோப்பாவில், 'புனித ஸில்வெஸ்டர் ஈவ்' எனும் புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

சீன நாட்டு மக்கள், கொடிய ஆவிகளை விரட்ட, புத்தாண்டு அன்று வீட்டின் கதவுகளை மூடிவிட்டு, வாசலில் பட்டாசுகள் வெடிப்பர். இதன்மூலம் தீமையை அகற்றுவதாக கருதுகின்றனர்.

இந்தியாவில் கொண்டாடப்படும், 'ஹோலி' பண்டிகையைப் போல, வண்ண நீர்களை ஒருவர் மீது ஒருவர் தெளித்து, ஆனந்தமாக புத்தாண்டை கொண்டாடுகின்றனர், கம்போடியா நாட்டு மக்கள்.

ஜப்பான் நாட்டு மக்கள் புத்தாண்டு அன்று நீண்ட நேரம் வாய்விட்டு சிரிப்பதால், நல்ல அதிர்ஷ்டம் வரும் என, நம்புகின்றனர்.

ஸ்காட்லாந்து நாட்டில், புத்தாண்டில் வீட்டுக்கு வரும் முதல் விருந்தினரால், நன்மை அல்லது தீமை ஏற்படுமா என, பார்ப்பது வழக்கமாக உள்ளது.