டாப் -அப் கடன் வசதியை எப்போது நாடலாம்?

தவணையை முறையாக செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள், வீட்டுக் கடன் மீது டாப்- அப் கடன் வசதியை அளிப்பதுண்டு. இவை கூடுதல் கடன் தொகையாக கருதப்படுகின்றன.

மூலக் கடனின் வட்டி அடிப்படையில் இதற்கான வட்டி விகிதம் அமையும். ஒரு சில வங்கிகள் கூடுதலாகவும் வட்டி வசூலிக்கலாம். இதற்கான காலம், கடன் காலத்திற்கு உட்பட்டு அமையும்.

டாப் -அப் கடன் என்பது வீட்டுக்கடன் மீதானது என்பதால் ஈட்டுறுதி இல்லாத கடன். வாடிக்கையாளர் கடன் வரலாறுக்கு ஏற்ப வங்கிகள் தீர்மானிப்பதால் எளிதாக கிடைக்கும் வசதி.

மேலும், ஏற்கனவே ஆவணங்களை சமர்ப்பித்து கடனுக்கான செயல்முறைகளை நிறைவேற்றியுள்ளதால், டாப்- அப் கடன் பெறும் போது புதிதாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

இதை தனிநபர் கடன் போல கருதலாம். இந்த தொகையை குறிப்பிட்ட நோக்கத்திற்காக தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாடிக்கையாளர் விரும்பிய வழியில் பயன்படுத்தலாம்.

வீடு பராமரிப்பு, மேம்பாடு அல்லது இதர செலவுகளுக்கு இந்த தொகையை பயன்படுத்தலாம். வீடு பராமரிப்பிற்கு பயன்படுத்தினால், அந்த தொகைக்கு வருமான வரி சலுகையும் கோர முடியும்.

எனினும், இந்த வசதியை பயன்படுத்துவதில் கவனம் தேவை. எளிதாக கிடைக்கிறது என்பதற்காக, கடன் பெற்று வாழ்வியல் சார்ந்த செலவுகளில் ஈடுபடுவது கடன் சுமையை உண்டாக்கலாம்.

அவசர தேவை காலத்தில், தனிநபர் கடன் போன்றவற்றை விட சாதகமானது எனத் தெரிந்தால் இந்த கடனை நாடலாம். ஆனால், கடன் தொகையை திரும்பச் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

தனிநபர் கடனோடு ஒப்பிடும் போது, இந்த கடனை திரும்பச் செலுத்த அதிக காலமாகும் என்பதால், வட்டி குறைவு என்றாலும், ஆண்டு கணக்கில் மொத்தமாக செலுத்தும் வட்டி அதிகமாக இருக்கும்.

எனவே, இந்த கடனை முன்கூட்டியே அடைக்க முயல்வது நல்லது. கடன் பெறுபவர் நிதி சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.