ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் கர்ப்ப அறிகுறிகளை எப்படி தெரிந்து கொள்ளலாம்?

ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிந்துகொள்வது சிறிது கடினமாக இருக்கக்கூடும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பெண்களுக்கு கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியாக, ஹெச்சிஜி ஹார்மோன் அதிகரிப்பால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு அதிகமாக இருக்கும்.

கர்ப்பத்தின் மற்றொரு அறிகுறியாக மார்பகங்களின் அளவு மாறும். ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதால், மார்பக மென்மை, வீக்கம் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும்; மார்பகங்கள் கனமாகவும் உணரலாம்.

ஹார்மோன் மாற்றத்தால் உடல் சோர்வு ஏற்படக்கூடும். இது தூக்கத்தை எளிதில் ஏற்படுத்தும்.

கர்ப்பகால ஹார்மோன்கள் உங்கள் சுவை, வாசனையை பாதிப்பதால், திடீரென்று சில உணவுகள் மீது அதிக ஆசை, பசியை ஏற்படுத்தும்; அதேசமயம் ஒரு சில உணவுகளின் மீது வெறுப்பும் ஏற்படலாம்.

ஆரம்பகால கர்ப்பத்தில் ஏற்படும் லேசான கருப்பை பிடிப்புகள் மாதவிடாய் பிடிப்புகளைப் போன்றே உணரலாம்; கர்ப்பத்திற்கு தயாராகும் போது கருப்பையில் ஏற்படும் மாற்றங்களால் இந்த தசை பிடிப்புகள் உண்டாகும்.

சில கர்ப்பிணிகளுக்கு வயிறு வீக்கம், வயிறு நிரம்பிய உணர்வு இருக்கக்கூடும். இது செரிமானத்தை பாதிக்கும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் செரிமான மண்டலத்தில் தசைகள் தளர்வால் ஏற்படும்.

ஏற்ற இறக்கமான மனநிலை கர்ப்ப காலத்தில் ஏற்படும் மற்றொரு அறிகுறி. இது அனைத்து கர்ப்பிணிகளுக்கும் வாடிக்கையான ஒன்று. உடலில் ஹார்மோன்கள் அதிகரிப்பதால் உண்டாகிறது.

கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பில் வெள்ளைபடுத்தல் வெளியேற்றம் அதிகரிப்பது இயல்பானதாகும். இது பிறப்புறுப்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

கர்ப்பகால ஹார்மோன்கள் செரிமான செயல்முறையை மெதுவாக்குவதால், சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும். எனவே, நிறைய தண்ணீர் குடிப்பதுடன், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

குமட்டல் மற்றும் வாந்தி... மார்னிங் சிக்னெஸ் பொதுவான கர்ப்ப அறிகுறியாகும்; ஆனால் இது பகலில் மட்டுமின்றி இரவின் எந்த நேரத்திலும் ஏற்படலாம்.

லேசான ரத்தப்போக்கு... கருவுற்ற கரு முட்டை உங்கள் கருப்பையின் உட்புறத்தில் சேரும்போது மிக லேசான ரத்தப்போக்கு ஏற்படலாம்.