உடலுக்கு வலிமை தரும் உளுந்தங்களி எப்படிச் செய்வது?
தேவையானப் பொருட்கள்: கருப்பு உளுந்து: 1 கப், கவுனி அரிசி: 1/4 கப், ஏலக்காய்: 2, நாட்டுச்சர்க்கரை: 1 1/2 கப், நல்லெண்ணெய்: 1 கப்.
கருப்பு உளுந்து, கவுனி அரிசியை தண்ணீரில் நன்றாக கழுவி உலர வைத்து, கடாயில் நன்றாக வாசனை வரும் வரை கிளறி, ஆற வைக்கவும்.
பின்னர், மிக்சி ஜாரில் ஏலக்காயுடன் சேர்த்து பவுடராக நன்றாக அரைத்து எடுக்கவும்.
கடாயில்
அரைத்த உளுந்துடன் 3 கப் தண்ணீர் சேர்த்து, கட்டிகள் தட்டாமல் நன்றாக
கரைத்து, அடுப்பை மிதமான தணலில் வைத்து, கை விடாமல் கிளற வேண்டும்.
கெட்டியான பதம் வந்தவுடன், நாட்டுச்சர்க்கரையை சேர்க்கவும். அல்வா பதத்துக்கு வந்தவுடன் நல்லெண்ணெயை சேர்த்து கைவிடாமல் சில நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருக்கவும்.
களியில் இருந்து எண்ணெய் பிரியத்துவங்கும் போது அடுப்பை அணைத்து விடலாம். இப்போது, சுவையான, ஆரோக்கியமான உளுந்தங்களி ரெடி.
நாட்டுச்சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், கருப்பட்டி போன்றவற்றையும் சேர்க்கலாம். சுவைக்கேற்ப இனிப்பின் அளவை கூடுதலாகவும் சேர்க்கலாம்.
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
உணவில் இதை அடிக்கடி பயன்படுத்த எலும்புகளின் வலிமை அதிகரிப்பதுடன், மூட்டுவலி, கை, கால் சோர்வில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
மலச்சிக்கல், ரத்தச்சோகையை தவிர்க்க முடிவதுடன், ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது.