ஊட்டச்சத்து குறைவால் வரும் ரத்த சோகையை தடுப்பது எப்படி?

ரத்த சோகைக்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணமாக உள்ளது. ஆண்களில் 25 %, பெண்களில் 57 % பாதிக்கப்படுவதாக தேசிய குடும்ப நல சுகாதார ஆய்வு கூறுகிறது.

பதின் வயது சிறுவர்களில் 31.1 சதவீதம், பதின் பருவ பெண்களில் 59.1 %, கர்ப்பிணியரில் 52.2 %, குழந்தைகளில் 67.1 % பாதிக்கப்பட்டுள்ளனர். இது, முந்தைய ஆண்டை விட 5 % அதிகரித்துள்ளது.

கருவுற்ற பெண்களுக்கு குழந்தை வளர்ச்சி குறைபாடு, அதிக ரத்தப்போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதேசமயம், பள்ளி செல்லும் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.

இரும்பு, போலிக் அமிலம், வைட்டமின் பி12, தனிமங்கள் போதுமான அளவு கிடைக்காமல் போவதால் ரத்த சோகை ஏற்படுகிறது.

ஹீமோகுளோபின் உருவாவதற்கு இரும்பு உதவுகிறது. அதேவேளையில், வைட்டமின் 12, போலிக் அமிலம் ஆகியவை ரத்த சிவப்பணுக்களின் முதிர்ச்சிக்கு உதவுகின்றன.

சிட்ரஸ் பழங்கள், வண்ணக் காய்கறிகள், பருப்பு வகைகள், கீரைகள், உலர் பழங்கள், மீன், மிதமான சிவப்பு இறைச்சி ஆகியவை குறைபாட்டை தவிர்க்க உதவுகின்றன.

டீ, காபி, மது, பதப்படுத்தப்பட்ட பேக்கரி உணவுகள், செயற்கை குளிர் பானங்கள், சிப்ஸ், பர்கர் போன்றவற்றை அடிக்கடி உட்கொள்வது, ஊட்டச்சத்து குறைபாட்டை அதிகரிக்கும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் டாக்டரை கட்டாயமாக கலந்தாலோசித்து, இரும்புச்சத்து மாத்திரைகளுடன், ஊட்டச்சத்து நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்.