கருச்சிதைவை தடுப்பது எப்படி?
முதன் முறையாக கர்ப்பம் தரிப்பவர்களில், 30 சதவீதம் பேருக்கு 'அபார்ஷன்' என்ற கருச்சிதைவு முதல் மூன்று மாதங்களில் ஏற்படுகிறது.
கரு உருவாகும் போதே அதில் மரபியல் கோளாறுகள் பெரியளவில் இருந்தால், அந்தக் கருவால் உயிர் வாழ முடியாது என இயற்கையாகவே கலைந்து விடும்.
இது தவிர, தாய்க்கு ரத்தம் உறையும் தன்மை அதிகமாக இருப்பது, கர்ப்பப்பை வாயின் நீளம் 2.5 செ.மீ.,க்கும் குறைவாக இருப்பது, கருச்சிதைவிற்கு பிற காரணங்கள்.
அடுத்த முறை கர்ப்பம் தரிக்கும் போது, ரத்த உறைவைத் தடுக்க, அதற்கென்று உள்ள மருந்துகள் மாத்திரை, ஊசி வடிவில் தரப்படுவதால், துவக்கத்திலிருந்தே கருவுக்கு சீரான ரத்த ஓட்டம் செல்லும்.
12, 20 வாரங்களில் ஸ்கேன் செய்யும் போது, கர்ப்பப்பை வாயின் நீளம் குறைவாக இருப்பது தெரிந்தால், தையல் போடலாம்.
முதல் கர்ப்பத்தின் போது கர்ப்பப்பை வாய் நீளம் குறைவாக இருப்பது சிலருக்குத் தெரியாது. இவர்களுக்கு 5வது மாதத்தில் வெள்ளைபடுதல் ஏற்பட்டு, எதிர்பாராமல் வலியின்றி பிரசவம் ஆகிவிடும்.
இவர்களுக்கு அடுத்த கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே கர்ப்பப்பை வாயை அழுத்தம் இல்லாமல் வைக்க 'புரோஜெஸ்ட்ரான்' என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படும்.
கருச்சிதைவிற்கு நீரிழிவு பாதிப்பும் முக்கிய காரணம். கர்ப்பம் தரிப்பதற்கு 3 மாதங்கள் முன்பிருந்தே ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை எடுத்தால், கர்ப்பம் தரிக்கும் முன் டாக்டரின் ஆலோசனைப்படி பாதுகாப்பான மாத்திரை எடுப்பது அவசியம். இல்லாவிட்டால் கருவின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
தைராய்டு அளவு சரியாக இருந்தால் தான் குழந்தையின் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டால், செயற்கை கருத்தரிப்பு முறையில், மரபியல் கோளாறு இல்லாத கருவை கர்ப்பப்பையில் வைத்து, ஆரோக்கியமான குழந்தை பெறலாம்.