மொபைல் போன் தொலைந்து போனால் உடனே செய்ய வேண்டியது என்ன ?

நம்முடைய மொபைல் போன், தொலைந்து விட்டாலோ, அல்லது திருட்டு போனாலோ, நாம் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிப்போம்.

மொபைல் போன் எங்குள்ளது என டிராக்கிங் செயலியில் கண்காணிக்க முயற்சிப்போம். ஆனால் போனிலுள்ள நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க மறந்துவிடுவோம்.

மற்றவர்களுக்கு நம் போன் கிடைக்கும்போது தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன. எனவே, மொபைல் போன் தொலைந்தாலோ, திருட்டு போனாலோ செய்ய வேண்டியவை குறித்துப் பார்ப்போம்.

முதல் வேலையாக, தொலைந்து போன மொபைல் போனில் உள்ள சிம் கார்டை முடக்குவது முக்கியம். அப்போது தான் உங்கள் எண்ணை மற்றவர்கள் தவறான பயன்படுத்துவது தடுக்கப்படும்.

அடுத்ததாக தரவுகளை ரிமோட் முறையில் நீக்குவதுடன், மோசடி நபர்களிடம் சிக்காமல் இருக்க, தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பைல்களை முடக்குவது அவசியம்.

மத்திய அரசின் www.ceir.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, உரிய தகவல்களை அளித்து மொபைல் போனை முடக்கலாம்.

நீங்கள் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவோராக இருந்தால், www.google.com/android/find என்ற முகவரிக்கு சென்று, கூகுள் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

அதில் உங்கள் மொபைல் போன் விவரங்கள் மற்றும் இடம் இடம்பெறும். தற்போது, பாதுகாப்பு மற்றும் அழிக்கும் வசதியை தேர்வு செய்து, தொலைந்த போனில் உள்ள தரவுகளை அழிக்கலாம்.

ஐபோன் பயன்படுத்துவோராக இருப்பின் www.icloud.com/find என்ற இணைய முகவரிக்கு சென்று ஆப்பிள் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

ஆப்லைனில் இருக்கும் போது போன் தொலைந்து போனால், அடுத்த முறை ஆன்லைன் வரும் போது மட்டுமே ரிமோட் முறையில் தரவுகளை அழிப்பது நடக்கும்.