ரூபாய் நோட்டு மீது எழுதினால் செல்லாமல் போகுமா?
வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு போலி செய்தி பரவும். உண்மை நிலை குறித்து சிறிது கூட யோசிக்காமல் பலரும் பார்வேர்டு செய்வர்.
அதன்படி, தற்போது 'புதிய ரூபாய் நோட்டில் ஏதாவது கிறுக்கினாலோ, எழுதினாலோ அது செல்லாது. எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் இல்லை' என ரிசர்வ் வங்கி கூறியதாக பரவி வருகிறது.
ஆனால், இது குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் துறை (Press Information Bureau), ' ரூபாய் நோட்டு தொடர்பான வாட்ஸ் ஆப் தளங்களில் பரவும் தகவல் போலியானது' என தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளது.
எழுதப்பட்ட வங்கி நோட்டுகள் செல்லாதவை அல்ல. அவற்றுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் தொடரும். தூய்மையான ரூபாய் நோட்டு கொள்கையின் கீழ், அவைகளை சிதைப்பது ஆயுளைக் குறைக்கும்.
எனவே, ரூபாய் நோட்டில் எழுத வேண்டாம் என அறிவுருத்தப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடமிருந்து புதிய வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை.
மக்களுக்கு தரமான ரூபாய் நோட்டுகள் வழங்கவும், படிப்படியாக அழுக்கடைந்த நோட்டுகளை புழக்கத்தில் இருந்து வெளியேற்றவும் 1999ல், தூய்மையான நோட்டுக் கொள்கையை வெளியிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.