தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம்

குடும்பத்தை விட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், அங்கிருந்து தங்களுடைய சம்பாத்தியத்தை குடும்பத்துக்கு அனுப்பி வருகின்றனர்.

இப்படி வெளிநாடுகளிலிருந்து தங்களுடைய தாயகத்துக்கு பணம் அனுப்புவதில், உலகளவில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடம் வகித்து வருவதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் தாயகத்துக்கு இந்தியர்கள் அனுப்பிய தொகை 100 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 8.1 லட்சம் கோடி ரூபாயாகும்.

வரலாற்றில் இதுவரை வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு பணத்தை பெற்றதில்லை. இது நடப்பாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டை விடவும் அதிகமாகும்.

நடப்பாண்டில், அன்னிய முதலீட்டாளர்கள் 6.48 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வர் என, மத்திய அரசு கணித்துள்ளது.

கொரோனாவுக்கு பிறகு, வேலைக்கு திரும்புவோர் அதிகரித்ததை அடுத்து, நடப்பாண்டில் அதிக பணம் அனுப்பப்பட்டு உள்ளது என, உலக வங்கியின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.