கண்களை காக்கும் புதுமை தொழில்நுட்பம்

மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக, தானமாகப் பெறப்படும் கண்களை, உரியவர்களுக்கு கொண்டு சேர்ப்பது பெரிய சவாலாக உள்ளது.

கண்களை அகற்றிய சில நிமிடங்களிலேயே, விழித்திரைகள் செயலிழக்கத் துவங்கிவிடுகின்றன. நேரமாக ஆக செயலிழந்து, மாற்று அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக இல்லாமல் போகிறது.

இந்த சவாலைச் சமாளிக்க, 'ஐ - எக்மோ' (Eye - ECMO) என்ற புதிய கருவியை அமெரிக்காவின் மயாமி பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இது எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கு சிறிய கருவிதான். இது தானமாகப் பெறப்பட்ட கண்ணுக்குள், கதகதப்பான ஆக்சிஜன் செறிந்த திரவத்தைச் செலுத்துகிறது.

இதனால், கண்கள் ஆப்ரேஷனுக்காக எடுத்துச் செல்லப்படும்போதும், மற்ற பரிசோதனைகள் செய்யப்படும்போதும் வெகுநேரம் நல்ல நிலையில் இருக்க உதவுகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், இக்கருவியின் வாயிலாக விழித்திரை, பல மணி நேரங்களுக்குப் பிறகும் உயிர்ப்புடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இக்கருவி, எதிர்காலத்தில் கண் தானத்தை மிக எளிமையாக்கும்.

மேலும், ஆப்ரேஷன் செய்யும் மருத்துவமனைகளுக்கு இடையே கண்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லவும் உதவும்.