பேரியாட்ரிக் ஆபரேஷன் பருமனான எல்லோருக்கும் தேவையா?

அதிக உடல் பருமனால் இயங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு, வயிறு மற்றும் குடல் பகுதிகளில் மேற்கொள்ளப்படும், பேரியாட்ரிக் ஆபரேஷன் பரிந்துரைக்கப்படுகிறது.

இம்முறை, உடல் பருமனுள்ள அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுவதில்லை.

அதிக உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு மட்டுமே, இச்சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

பி.எம்.ஐ.,40க்கு மேல் இருப்பவர்கள், இதற்குத் தகுதியானவர்கள். உதாரணத்துக்கு, 5.6 அடி உயரமுள்ள 110 கிலோவுக்கு மேல் இருப்போருக்கு இச்சிகிச்சை ஓகே.

பி.எம்.ஐ., 35க்கு மேல் இருந்து, அதோடு ரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டு வலி, தைராய்டு போன்ற இணை நோய்கள் இருந்தாலும், ஆலோசிக்கப்படும்.

குறைந்தது ஆறு மாதங்கள் டாக்டர்கள் மேற்பார்வையில் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள் வாயிலாக எடை குறைக்க முயன்றும் பலன் அளிக்காதவர்களுக்கு ஏற்றது.

குறிப்பாக, கட்டுப்படுத்த முடியாத இதய நோய், கல்லீரல் செயலிழப்பு, கர்ப்பம், மது, போதைக்கு அடிமையானவர்கள், புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.

மேலும், கடுமையான மனநல பிரச்னை உள்ளவர்களுக்கும் இது உகந்ததல்ல.