தண்ணீர் அதிகம் குடித்தாலும் ஆபத்தா?
உடல் சரியாக இயங்க தண்ணீர் அவசியம் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். உடல் வெப்பநிலையை இயல்பான நிலையில் வைக்க உதவுகிறது.
தண்ணீரானது மூட்டுகளுக்கு இடையே வழவழப்பு மற்றும் மென்மையை வழங்குகிறது. முதுகுத் தண்டுவடத்தையும், பிற நுண்ணிய திசுக்களையும் பாதுகாக்கிறது.
உடல் கழிவுகளை சிறுநீர், வியர்வை மற்றும் குடல் இயக்கம் மூலம் வெளியேற்றுகிறது. அதே சமயம் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது, உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
உடல் எடையை குறைப்பதற்காக அதிகளவு தண்ணீரை ஒருசிலர் உட்கொள்கின்றனர். இதனால், மூளை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
உடல் உறுப்புகள் செயல்பாட்டுக்கு எலெக்ட்ரோலைட் தேவை. தண்ணீர் அளவுக்கு அதிகமாக குடிக்கும்போது, இந்த எலெக்ட்ரோலைட் நீர்த்துப் போகும். இதை வாட்டர் இன்டாக்சிகேஷன் என்பர்.
இது மூளை செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும். எலெக்ட்ரோலைட் நீர்த்துப்போய், ரத்தத்தில் சோடியம் அளவு 1 லி.,க்கு 135 மில்லிமோலுக்கு கீழ் குறைந்தால், ஹைபோநெட்ரீமியா என்பர்.
சோடியம் அளவு குறையும் போது, திரவங்கள் வெளியில் இருந்து செல்கள் உள்ளே சென்று, வீக்கம் ஏற்படுகிறது. இந்த வீக்கம் மூளை செல்களுக்கு நிகழும்போது, உயிருக்கு ஆபத்தானதாக அது மாறும்.
இதுதவிர குழப்பமான நிலை, குமட்டல் வாந்தி, தலைவலி, பிபி எகிறுவது, மூச்சு விட சிரமம், இரண்டு இரண்டாக தெரிவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
எனவே, தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடித்தால் போதுமானது என்பது டாக்டர்களின் கருத்து. தாகம் உண்டாகும்வரை காத்திருக்காமல், அவ்வப்போது தண்ணீர் குடியுங்கள்; உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.