அரசியல் கட்சி துவக்கமா...? காலம் முடிவு செய்யும் என்கிறார் விஷால்
நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்கியதை அடுத்து நடிகர் விஷாலும் அரசியல் கட்சியை துவங்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதன் முன்னோட்டமாக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றும் வேலைகளில் உள்ளார். இந்நிலையில் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக அங்கீகாரம் அளித்த தமிழக மக்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
ஆரம்பம் முதலே 'இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு' என்ற நோக்கத்தில் எனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.
அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்துக்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்கிறோம்.
நான் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை. 'நன்றி மறப்பது நன்றன்று' என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருப்பேன்.
தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன்.
வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.