சும்மா கிறுக்கித் தள்ளட்டும் உங்க குழந்தைகள் !

வரும் கல்வியாண்டில் பள்ளிக்கு முதன்முறையாக செல்லும், பிள்ளைகளுக்கு வீடுகளில் பாடம் இப்போதே துவங்கிவிட்டது.

விரும்பிய பள்ளிகளில் இடம் பிடிப்பதற்காக, பலரும் ஆர்வத்தில் எடுத்தவுடன், 'ஏ - ஆப்பிள்' 'பி- பால்' என எழுத்துகள், வார்த்தைகளை கற்பிக்கின்றனர்; இது முற்றிலும் தவறான அணுகுமுறை.

எல்.கே.ஜி., யு.கே.ஜி., சேர்க்கையில் எழுத்துக்கள் எழுத தெரியுமா, வார்த்தைகள் படிக்க தெரியுமா என யாரும் சோதிப்பதில்லை.

முதலில் சொல்லிக்கொடுக்க துவங்கும் போது, ஏதோ புது விளையாட்டு என ஆர்வமாக கவனிக்கும் குழந்தைகளுக்கு நாளடைவில் கற்றல் என்பது கசந்துவிடும்.

முதலில் குழந்தைகள் சுவற்றில் அல்லது நோட்டில், அவர்களின் விருப்பத்துக்கேற்ப கிறுக்க அனுமதிக்கலாம். அதற்கு, கலர் பென்சில்கள், கிரையான்களை வாங்கித் தர வேண்டும்.

பின் பெரிய கட்டம், சதுரம், செவ்வகம் வரைந்து அதற்குள் வெளிவராமல் கிறுக்க ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து, கட்டத்தை சிறிதாக்கி அதற்குள் கிறுக்குமாறு கூற வேண்டும்.

இரண்டு புள்ளிகள் வைத்து, நேர்கோடு, சாய் கோடு, 'சி' போன்ற வளைவுகளை இணைக்க கற்றுத் தரலாம். பின், புள்ளிகளை வைத்து நேர்கோடு, சாய் கோடு, 'சி' போன்ற வளைவுகளை இணைக்கவேண்டும்.

இறுதியாக புள்ளிகளின்றி, நேர்கோடு, வளைக்கோடு, கேர்வ் என்ற 'சி' போன்ற வளைவுகளை போட பழக்கிய பின், எழுத்துக்களை எழுத கற்றுக் கொடுக்கலாம்.

அதுவும் முதலில் புள்ளிகள் வைத்தே, அதை இணைத்து பழக்க வேண்டும். குறிப்பாக, தாய்மொழி சார்ந்த எழுத்துக்களை முதலில் கற்பிப்பது, குழந்தைகளுக்கு எளிதாக இருக்கும்.

பிறந்து, புரண்டு, தவழ்ந்து, எழுந்து, நடந்து... என்று படிப்படியாக வளரும் பிள்ளைகளுக்கு, கற்றலிலும் படிப்படியான அணுகு முறையை பின்பற்ற வேண்டும் என்பது ஆசிரியர்களின் அட்வைஸாகும்.