மாசாய் மாரா அழைக்கிறது.. செல்வோமா...
ஆப்பிரிக்காவின் இதயம் என்று அழைக்கப்படும் கென்யாவின் மாசாய் மாரா தேசியக் காப்பகம், இப்போது ஒரு புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது.
நாரோக் பகுதியில் அமைந்துள்ள இந்த இயற்கை சொர்க்கம், ஏப்ரல் மாதத்தின் ரம்மியமான சூழலில் விலங்குகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது.
ஏப்ரல் தொடக்கத்தில் பெய்யும் மிதமான மழையினால், மாரா சமவெளி முழுவதும் அடர் பச்சை நிறப் புற்கள் கம்பளம் விரித்தாற்போலக் காட்சியளிக்கின்றன.
புகைப்படக் கலைஞர்களுக்குத் தேவையான அந்த 'டிராமேட்டிக்' பின்னணி ஒளியும், பசுமை நிறமும் இப்போது அங்கு தாராளமாகக் கிடைக்கிறது.
மாசாய் மாராவின் அடையாளமே அதன் சிங்கக் கூட்டங்கள்தான். அதிகாலை வேளையில் பனிமூட்டத்திற்கு இடையே கம்பீரமாகத் தங்கள் எல்லையைக் கண்காணிப்பதையும் காண முடிகிறது.
மற்ற விலங்குகளை விடச் சிறுத்தைகளைப் படம் பிடிப்பது ஒரு சவால். ஆனால் மாசாய் மாராவின் திறந்தவெளிப் புல்வெளிகள் இதற்குச் சாதகமானவை.
ஒட்டகச்சிவிங்கிகள், வரிக்குதிரைகள் மற்றும் நீர்யானைகள் எனப் பல்லாயிரக்கணக்கான விலங்குகள் இயற்கையோடு இணைந்து வாழ்கின்றன.
மாசாய் மாராவின் பரந்து விரிந்த சமவெளியில், யானைக் கூட்டங்கள் தங்களின் குட்டிகளுடன் நீண்ட தூரம் அணிவகுத்துச் செல்வது ஒரு கண்கொள்ளாக் காட்சி.