மலையேற்றம் செய்வோருக்கு சிறந்த இடம் மங்களூரு எடகுமேரி!

மலையேற்றம் செய்வோரில் சிலருக்கு சாகசம் நிறைந்ததாக இருக்க வேண்டும்; சிலருக்கோ பசுமையாக இருக்க வேண்டும். இவ்விரண்டையும் 'எடகுமேரி' மலையேற்றம் பூர்த்தி செய்யும்.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரில் இருந்து 100 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள எடகுமேரி மேற்கு தொடர்ச்சி மலையில் ஒளிந்துள்ள மலையேற்ற பகுதியாகும்.

குறிப்பாக, டோனிகல் - எடகுமேரி இடையேயான 17 கி.மீ., வழித்தடம், வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த பாதை முன்னர், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது.

தற்போது இயற்கை ஆர்வலர்கள், மலையேற்றத்தில் விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு புறம் பள்ளத்தாக்கு, மற்றொரு புறம் மலை. இவ்விரண்டுக்கும் இடையில் பயன்படாத ரயில் தண்டவாளத்தில் இயற்கையை ரசித்தபடி நடந்து செல்லலாம்.

மூடுபனியால் மூடப்பட்ட மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் உங்களை மெய்மறக்க செய்யும். 0.75 கி.மீ., நீளமுள்ள சுரங்கப்பாதை அமைந்துள்ளது.

பஸ்சில் செல்வோர், சக்லேஸ்புரா பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டோனிகல் ரயில் நிலையம் சென்றடைய வேண்டும். அங்கிருந்து எடக்குமேரிக்கு பசுமை வழித்தடத்தை பயன்படுத்தலாம்