மனதை வருடும் மெக்லவுட் கஞ்ச்...! ஹிமாச்சலில் ஓர் ஊட்டி...!
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சுற்றுலாவுக்குப் பெயர்போனது. பிரம்மாண்ட கஞ்சன்சங்கா, அழகிய டார்ஜிலிங், குலு மணாலி, சிம்லா, தர்மசாலா என சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முக்கிய மாநிலமாகத் திகழ்கிறது.
இந்த மாநிலத்தின் வருவாயில் சுற்றுலா முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலமானவை.
ஆனால் நம்மூர் ஊட்டி, கொடைக்கானல் போல சிறிய பட்ஜெட் சுற்றுலாத் தலமும் ஹிமாச்சல் மாநிலத்தில் உள்ளது பலருக்குத் தெரியாது. இந்த தலத்தின் பெயர் மெக்லவுட் கஞ்ச்.
உங்கள் பட்ஜெட் மிகக் குறைவானதாக இருந்தாலும் நீங்கள் ஹிமாச்சல பிரதேசத்தின் உயர்தர சுற்றுலாப் பிரதேசங்களுக்குச் சென்று, அனுபவிக்கும் அத்தனை விஷயங்களையும் இந்த சிறு நகரில் அனுபவித்து மகிழலாம்.
தர்மசாலாவின் மகுட ஆபரணம் என்று அழைக்கப்படும் டிரியுண்ட் ட்ரெக் பகுதியில் அட்வெண்சர் விரும்பிகள் பலர் இரவு டெண்ட் அடித்து தங்குவது வழக்கம்.
பாக்சு மன்னர் இங்கு கட்டிய பாக் சுனாத் பாம்பு கோவில் புகழ் பெற்றது. இங்குள்ள அருவியில் குளித்து சிவன் கோவிலில் வழிபட கோர்கா மற்றும் இந்து சமூக மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வர்.
தால் ஏரிக்கு அருகே அமைந்துள்ள சிறு மலை கிராமம் தரம்கோட். கோவா சுற்றுலாப் போல இங்கு உள்ள பார்களுக்குச் செல்ல அதிகளவில் மதுப்பிரியர்கள் வருகை தருவர்.
ஹனிமூன் ஜோடிகள் போட்டிங் செல்ல ஏற்ற பிரம்மாண்ட ஏரி தால் ஏரி. அடர்ந்த டெக்கோர் மரங்கள் மற்றும் அமைதி சூழ்ந்த இப்பகுதியில் தனிமையில் புதுமண ஜோடிகள் நேரத்தை செலவிடலாம்.
திபெத்துக்கு வெளியே உள்ள மிகப்பெரிய திபெத்திய புத்தர் கோவில் நம்கியால் மொனாஸ்ட்ரி. 14-வது தலாய் லாமாவின் நினைவாகக் கட்டப்பட்ட இந்த மொனாஸ்ட்ரியில் அமைதி தேடி பெளத்த மத பக்தர்கள் வருகை தருவர்.