சீவா மாயாஜால குளம்... நீச்சல் தெரியாமலேயே மிதந்து மகிழலாம்!
நீச்சலே தெரியாமல் அகன்ற குளத்தில் நீந்தி மகிழ வேண்டும் என்ற கனவு இருந்தால், எகிப்தின் மேற்கு பாலைவனத்தில், சீவா சோலைவனத்திலுள்ள உப்பு குளத்திற்கு சென்றால் உங்கள் கனவு நனவாகும்.
இந்த குளத்தில் இறங்குபவர்கள் மூழ்காமல் மிதந்துக்கொண்டே இருப்பார்கள். இதனால், வியப்பூட்டும் வகையில் உள்ள இந்த குளத்தை, 'மாயாஜால குளம்' என்கின்றனர்.
ஆனால், மாயாஜாலம் எல்லாம் ஒன்றுமில்லை. இதன் பின்னே இருப்பது அறிவியல் தான். குன்றுகள் மற்றும் சுண்ணாம்பு மலைகளால் சூழப்பட்ட சீவா சோலைவனம் 33 சதுர மைல் பரப்பளவு கொண்டது.
இங்கு அலெக்சாண்டர் கோயில், சீவா பாரம்பரியங்களின் அருங்காட்சியகம் உட்பட பல்வேறு இடங்கள் இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் பலரும் இங்குள்ள உப்பு குளங்களில் நீந்தவே விரும்புகின்றனர்.
இப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான உப்பு ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. இவை உப்புத்தன்மை அதிகம் கொண்டவை. அதிகம் என்றால், கடல் தண்ணீரை விட ஒன்பது மடங்கு உப்பு அதிகம்.
நீர் மூலக்கூறுடன் உப்புக் கலந்து நன்னீரை விட அதன் அடர்த்தியை அதிகமாக்கும். இதனால், நாம் தண்ணீரில் இறங்கினால் மூழ்காமல் மிதந்துகொண்டே தான் இருப்போம்.
இப்பகுதியில் உள்ள ஏரிகளில் பெரும்பாலும் உப்பு தண்ணீர் ஓடுவதால் அவற்றை குடிக்கவும், விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாது. இதனால் உள்ளூர் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இங்குள்ள உப்பு குளங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வளவு அதிர்ஷ்டமாக உள்ளதோ, அதேயளவுக்கு உள்ளூர் மக்களுக்கு சாபமாக உள்ளது. இதில் கடல்வாழ் உயிரினங்களும் வாழ முடியாது.