புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு நவீன நீராவி சிகிச்சை!
சிறுநீர் பைகளுக்கு கீழே, புரோஸ்டேட் என்ற சுரப்பி, 40 வயதிற்கு மேல் மெதுவாக வளரத் துவங்கி, 60 வயது வரை பெரிதாகிக் கொண்டே சென்று சிறுநீர் பாதையை அடைக்கும்.
50 சதவீத ஆண்களுக்கு இப்பிரச்னை உள்ளது. அறிகுறிகள் வெளிப்படும் வயதும் நபருக்கு நபர் மாறுபடும்.
வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடுத்த நிலையில் சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு இருந்தாலும் உடனே வெளியேறாமல் தாமதமாக வெளியேறுவது அறிகுறிகளாகும்.
மேலும், தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டும் சிறுநீர் வெளியேறக்கூடும். வெளியேறும் வேகம் வழக்கத்தை விட குறைவது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகும்.
சிறுநீர் வெளியேற முடியாமல் சிரமப்படும் இப்பிரச்னைக்கு, 'புரோஸ்டேட் என்லார்ஜ்மென்ட்' என்று பெயர். வயது அதிகரிப்பது தான் இதற்கு பிரதான காரணம்.
இச்சுரப்பியில் 'ஆன்ட்ரோஜென் ரிசப்டார்'கள் என்ற புரத ஊக்குவிகள் உள்ளன. வயதாகும் போது, 'டெஸ்ட்ரோஸ்டீரான் ஹார்மோன்' இவற்றை அதிகமாக துாண்டுவதாலும் சுரப்பி பெரிதாகலாம்.
இயல்பாக 20 - -30 கிராம் எடையுள்ள இந்த சுரப்பி வளர ஆரம்பித்தால், 40 -- 200 கிராம் எடை வரை வளரும்.
புரோஸ்டேட் சுரப்பி வெளிப்புறமாக வளர்ந்தால் 100 செ.மீ., இருந்தாலும் சிறுநீர் பாதையை அடைக்காது. சுரப்பியின் அளவை விட, சிறுநீர் பாதையை அடைக்கிறதா என்பதே முக்கியம்.
பாதிப்பின் தன்மையை அறிய அல்ட்ரா சவுண்டு, கேன்சர் பாதிப்பு உள்ளதா என்பதற்கு பி.எஸ்.ஏ., போன்ற பரிசோதனைகள் செய்வது அவசியம்.
கேன்சர் இல்லாவிட்டால் புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தை குறைத்து, பாதையை ரிலாக்ஸ் செய்ய மருந்துகளும், தேவைக்கு ஏற்ப அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகின்றன.
இந்நிலையில், அறுவை சிகிச்சைகளுக்கு மாற்றாக தற்போது நவீன தொழில்நுட்பத்தில் வாட்டர் வேபர் என்ற நீராவி சிகிச்சை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.