கண்களை சோம்பலாக்கும் செல்போன் !

செல்போன், டேப் போன்ற மின்னணு சாதனங்களை கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்ப்பதால், தசைகள் அழுத்தம் அடைகிறது.

இது 'மயோபியா' என்ற கிட்டப்பார்வை வரும் வாய்ப்பை குழந்தைகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதைத் தவிர்க்க, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர்.

காலை, மாலை இருவேளையும் சூரிய ஒளியில் இருப்பது 'விட்டமின் டி' கிடைப்பதற்கு மட்டுமல்ல, மயோபியா வருவதையும் தடுக்கும்.

துாங்கும் நேரம் வரை மொபைல் போன் பார்ப்பது 'மெலடோனின்' ஹார்மோன் சுரப்பைத் தடுக்கும்; இதனால் ஆழ்ந்த உறக்கம் வராது. இது, குழந்தைகளின் அறிவுத்திறனையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

புத்தகம் வாசிப்பது, வரைவது, வெளியில் சென்று விளையாடுவது போன்ற விஷயங்களில் துவக்கத்தில் இருந்தே ஆர்வத்தை ஏற்படுத்தினால், மொபைல் போன் ஆர்வம் வராது.

மாறாக, மொபைல் போனை கொடுத்து பழக்கிவிட்டால், அதிலிருந்து வெளியில் கொண்டு வருவது சிரமம்.

பள்ளியில் சேர்ப்பதற்கு முன் கண்களை பரிசோதனை செய்வது கட்டாயம். குழந்தைப் பருவத்தில் வரும் மயோபியாவை சரி செய்யாமல் விட்டால், அது 'ஆம்பிலோபியா' எனப்படும் சோம்பல் கண்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

12 வயதிற்குள் மயோபியாவிற்கு சரியான பவரில் கண்ணாடி போட்டால் தான் இதைத் தவிர்க்க முடியும். அதன்பின், சோம்பல் கண்களை சரி செய்வது மிகவும் சிரமம்.