அமெரிக்க விசா வேண்டுமா? நேர்காணலுக்கு 346 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை!

அமெரிக்காவிற்கு சுற்றுலா மற்றும் வணிக விசாவில் செல்ல விரும்புவோர், நேர்காணலுக்கு, 346 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வேலை, கல்வி, சுற்றுலாவுக்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் அமெரிக்காவுக்கு செல்கின்றனர்.

அதிலும் நம் நாட்டைச் சேர்ந்தவர்களே முன்னணியில் உள்ளனர். கடந்த நிதியாண்டில் மட்டும், நம் நாட்டில் இருந்து, 14.5 லட்சம் தற்காலிக விசா விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

லட்சக்கணக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க, நம் நாட்டில், 68 துாதரக அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர்.

இதனால் ஒவ்வொரு அதிகாரியும் சராசரியாக, 21,401 விண்ணப்பங்களை கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பி1, பி2 எனப்படும் சுற்றுலா மற்றும் வணிக விசாவுக்கான நேர்காணலுக்கு அழைக்க, 346 நாட்கள் ஆகும் என்று அமெரிக்க அரசு கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது, 2019 கொரோனா தொற்று காலத்துக்கு முன் இருந்த 42 நாள் காத்திருப்பை விட எட்டு மடங்கு அதிகம்.

இதற்கிடையே, தற்காலிக விசாவுக்கு கூடுதல் கட்டணமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா அல்லது வணிக விசாவுக்கு, 15,500 ரூபாய் அடிப்படை கட்டணமாக செலுத்த வேண்டும்.

புதிய விதியின்படி விசாவுக்கு ஒப்புதல் வழங்கும்போது கூடுதலாக, 24,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்