ஊட்டச்சத்து மிக்க நீல நிற இட்லி! தயார் செய்வது எப்படி?
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் நீலநிற இட்லி குறித்து பதிவிட்ட வீடியோ வைரலாகியது. அதை எப்படி தயாரிப்பது, அதன் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
எளிதில் செரிமானம் ஆவதோடு, எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு இட்லி. வழக்கமான இட்லியை விட தனித்துவமான நீல நிற இட்லி குழந்தைகளை ஈர்க்கும். ஊட்டச்சத்தும் நிறைந்தது.
சங்கு பூவை ஊறவைத்து, அரைத்து அதனை வழக்கமான இட்லி மாவுடன் கலந்து தயாரிப்பதால், நீலநிற இட்லி கிடைக்குமென வீடியோப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும், சிலர் மாவில் அடர்த்தியான வண்ணம் சேர்க்கப்பட்டு இருக்கலாமென சந்தேகப்படுகின்றனர்.
காடுகள், வேலி மற்றும் தோட்டங்களில் இயற்கையாக வளரும் சங்குப்பூவின் இலை, வேர், விதை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும்.
உடல் வெப்பத்தை தணிப்பதுடன், கண் நோய், மந்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும். சங்குப்பூவை தொடர்ந்து சாப்பிட, ஞாபகச்சக்தி அதிகரிப்பதோடு, மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது.
உடலில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவும் என்பதால், டைப் 2 நீரிழிவு பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்.
தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று சங்குப்பூவை போட்டு கொதிக்க வைத்தால், நீல நிறமாக மாறத் துவங்கும். சிறிதளவு டீத்தூள் போட்டு இறக்கி விடவும்.
தேவையான சூட்டில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். அல்லது சங்குப்பூ சாறுடன் பனங்கற்கண்டு, வெல்லம் சேர்த்தும் குடிக்கலாம்.