இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்!!
உலகில் எதாவது ஒரு இடத்தில் வறுமையால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி.
இவர், சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் தான் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. பின் ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.
வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.
இந்தாண்டு "சமூக மற்றும் நிறுவன துஷ்பிரயோகத்திற்கு முடிவு கட்டுதல்" என்பது இத்தினத்தின் மையக்கருத்து.
அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உடை, இருப்பிடம் என அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும்.
இவை இல்லாத அனைவரும், வறுமை நிலையில் இருப்பவர்கள் என கருதப்படுவர். பட்டினி மற்றும் வன்முறைக்கு வறுமை வழி வகுக்கிறது.
ஏழ்மை நிலையில் இருப்பவர்களை, ஒரே நாளில் வசதியானவர்களாக மாற்றிட முடியாது. கல்வி வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிக்கலாம். சமுதாய மாற்றமும் உருவாகும்.