கோபத்தை குறைக்கும் ஒமேகா 3 கொழுப்பு!

நல்ல கொழுப்புகளில் முதன்மையானவை 'ஒமேகா 3' கொழுப்பு அமிலங்கள். இவை, சில சைவ உணவுகளில் உள்ளன. ஆனால், மிக அதிகமான அளவில் சில மீன்களில் உள்ளன.

மீன் எண்ணெய் மாத்திரைகளில் இந்த கொழுப்பு அதிகமாக இருப்பதால் தான், அவை இதயத்திற்கு நன்மை தருபவை எனப்படுகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலை விஞ்ஞானிகள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று, இந்த ஒமேகா 3, கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் குறைப்பதாகக் கூறுகிறது.

அளவுக்கு மீறிய கோபம், ஆக்ரோஷம் நம் உடல்நலத்தைக் கெடுக்கிறது. சில நேரங்களில் வன்முறையைத் தோற்றுவித்து, பிறருக்கு தீங்கு விளைவிக்க வைக்கிறது. இதனால் இது ஒரு சமூகப் பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், அதிகளவிலான ஒமேகா 3 சத்துள்ள மீன்களை உண்பது, தற்கொலை எண்ணத்தை குறைப்பதாக ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் ஒமேகா 3 உள்ளிட்ட சில சத்துக்கள் நிறைந்த உணவு, சிறைவாசிகளுக்கு கொடுக்கப்பட்டது. இது, அவர்களிடமிருந்த வன்முறை எண்ணத்தை குறைத்தது.

பென்சில்வேனியா பல்கலை விஞ்ஞானிகள், ஒமேகா 3 மருந்தை ஆண், பெண் ஆகிய இரு பாலினத்தையும் சேர்ந்த பல்வேறு வயதினருக்கு கொடுத்து சோதித்தனர்.

ஆய்வு முடிவில், அவர்களின் ஆக்ரோஷம் குறைந்திருப்பது தெரிய வந்தது. ஒமேகா 3 மூளையின் செயல்பாடுகளை ஊக்குவித்து, நரம்பு மண்டலத்திற்கு நன்மை செய்வது தான் இதற்கு காரணம் என்பது விஞ்ஞானிகள் கருத்து.