பூக்களிலிருந்து நிறமி... உணவு பொருட்களில் இனி இயற்கை வண்ணம் !
பூக்களில் இருந்து உணவுகளுக்கு வண்ணமேற்றுவதற்கான இயற்கை நிறமூட்டிகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை, தமிழ்நாடு வேளாண் பல்கலை மலரியல் துறை உருவாக்கியுள்ளது.
பூக்களிலிருந்து உணவு சார்ந்து மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளன. செம்பருத்தி, ரோஜா உள்ளிட்டவற்றை நேரடியாக உண்ண முடியும்.
இதிலிருந்து நிறமிகளைப் பிரித்தெடுத்து, உணவுப் பொருட்களில் இயற்கை நிறமூட்டிகளாக பயன்படுத்தலாம்.
ரோஜாவிலிருந்து உணவுப்பொருட்களுக்கான இயற்கை நிறமூட்டி மேம்படுத்தப்பட்டுள்ளது.
செம்பருத்தி டைப் 2 நீரிழிவு, இதயம் சார்ந்த நாட்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்கும் திறன் கொண்டது. தற்போது, இதிலிருந்து சிவப்பு நிறமூட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
செண்டுமல்லி, சங்குப்பூ, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகியவற்றில் இருந்தும் நிறமூட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன; எனினும், அவை 'கிளினிகல் டிரையல்' ஆய்வு நிலையில் உள்ளன.
உணவுக்கான இயற்கை நிறமூட்டிகளை பவுடர், திரவம் என இரு வகைகளிலும் தயாரிக்கலாம். இதற்கான தொழில்நுட்பம் குறித்து பயிற்சியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும், பூக்களில் ஷாம்பூ, ஹேர்வாஷ் பவுடர் போன்றவற்றையும் தயாரிக்கலாம். 'சிரப்' தயாரித்து உணவாகப் பயன்படுத்த முடியும்.