புளூ பாதிப்பும் மழைக்காலமும்!
ஆண்டு முழுதும் இருக்கும் புளூ தொற்று பாதிப்பு, மழைக்காலம் ஆரம்பித்தவுடன் பல மடங்கு அதிகமாகிறது.
எல்லா மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் மழை பெய்வதில்லை. கேரளாவில் ஜூன் மாதம் ஆரம்பிக்கும்; சென்னையில் அக்டோபர், நவம்பர், டிசம்பரில் மழை அதிகம் இருக்கும்.
கடந்த அக்டோபரில் பரவத் துவங்கிய புளூ பாதிப்பு, இந்த ஆண்டு மார்ச் வரையிலும் நீடிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
சளி, காய்ச்சல், மூக்கில் நீர் வடிவது என்றாலே புளூ என்று சொல்ல முடியாது. எல்லா வைரஸ் தொற்றும் இதே அறிகுறிகளுடன் தான் இருக்கும்.
புளூ வைரசில் மரபணு மாற்றம் நடந்து கொண்டே இருக்கும். இதில் இன்புளூயென்சா ஏ, பி, சி என்ற மூன்று வகைகள் உள்ளன. இது தவிர பாரா - இன்புளூயன்சா ஏ, பி வைரசும் உள்ளது.
இதில், இன்புளூயென்சா ஏ வைரசில் ஆண்டுதோறும் ஏற்படும் பிரதானமான இரு வகை மரபணு மாற்றத்தால் பரவும் விதமும் மாறுகிறது.
ஒன்று, ஆன்டிஜெனிக் டிரிப்ட். இதனால் பெரிய பாதிப்பு வராது. சில சமயங்களில், ஆன்டிஜெனிக் ஷிப்ட் எனப்படும் மொத்த மரபணுவும் மாறிவிடும்.
அப்போது தான் தொற்று பரவல் தீவிரமாக இருக்கும். 2009ம் ஆண்டு ஹெச்1, என்1 என்ற ஸ்வைன் புளூ -பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இப்படி ஏற்பட்டது தான்.
இது தவிர ஹெச்3என்2 என்ற புளூ வகையும் உள்ளது. இதில் எல்லா வகையும் நம் நாட்டில் உள்ளன.
ஒரு முறை வந்த புளூ பாதிப்பு அடுத்த ஆறு மாதங்களுக்கு வராது. அதன்பின் அதனுடைய மரபணு முழுமையாக மாற்றம் அடைவதால் மீண்டும் வரலாம் எனவும் கூறப்படுகிறது.
அதனால் தான் புளூ எளிதில் ஏற்பட கூடியவர்கள் ஆண்டுதோறும் தடுப்பூசி போட டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.