அனைவரையும் அசத்தும் அசோகா அல்வா ரெசிபி இதோ!!

தீபாவளியை தித்திக்க வைக்க சுவையும், சத்தும் அளிக்கும் அசோகா அல்வா எப்படி தயாரிப்பது என இங்கு பார்ப்போம்.

இதெல்லாம் தேவை: பாசிப்பருப்பு - 1/2 கப், சர்க்கரை - 1 கப், ஏலக்காய்த்துாள் -1/4 டீஸ்பூன், சிவப்பு புட் கலர் - சிறிது, கோதுமை மாவு - 1 டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, உடைத்த முந்திரி - 5 மேஜைக்கரண்டி.

செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வறுத்தெடுக்கவும்.

குக்கரில் பாசிப்பருப்புடன், தேவையான அளவு தண்ணீர் விட்டு குழைவாக வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் நன்கு மசிக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில், இரண்டு தேக்கரண்டி நெய்விட்டு, முந்திரியை வறுத்தெடுத்து தனியாக வைக்கவும்.

அதே நெய்யில் கோதுமை மாவை சேர்த்து நன்கு வறுக்கவும். அதனுடன் மசித்த பருப்பு, சர்க்கரை, புட் கலர், ஏலக்காய்த்துாள் சேர்த்து கிளறவும்.

அடுப்பை சிறு தீயில் வைத்து, இடையிடையே தேவையான அளவு நெய்விட்டு, கைவிடாமல் கிளறவும்.

கலவை நன்கு சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். வறுத்த முந்திரியை மேலே துாவி அலங்கரித்து பரிமாறவும்.