ஜீரணத்தை மேம்படுத்தும் வெற்றிலையில் பாயாசம் செய்யலாமா!! ரெசிபி இதோ!!
சாப்பிட்டு முடித்த பிறகு பொதுவாக வெற்றிலை, பாக்கு போடுவது இன்றும் நம்மிடம் உள்ள பழக்கம். அதற்கு காரணம் அது ஜீரணதிற்கு மிகவும் நல்லது.
அதில் பாயாசம் செய்தால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். வெற்றிலை பாயாசம் எப்படி செய்யலாம் என தெரிந்துகொள்வோம்.
இதெல்லாம் தேவை: வெற்றிலை - 5, பாதாம் பிசின் - 5 கிராம், ஊற வைத்த பாதாம், முந்திரி, பிஸ்தா- தேவையான அளவு; பால்- 1 லிட்டர், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ- சிறிதளவு, சர்க்கரை அல்லது வெல்லம் - தேவைக்கு ஏற்ப.
செய்முறை: பாதாம் பிசினை ஊற வைத்து கொள்ளவும். பிறகு பாதாம், முந்திரி, பிஸ்தாவை விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பாலை ஆடைகள் மிதக்க சுண்ட காய்ச்சிக் கொள்ள வேண்டும். அதில் பாதாம் பிசின், பாதாம், முந்திரி, பிஸ்தா விழுதையும் சேர்த்து நன்கு கிண்டி விடவும்.
பின் வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து அதில் ஊற்றவும். தேவைக்கேற்ப சர்க்கரை சேர்க்கவும். வாசனைக்கு ஏலக்காய் பொடி, குங்குமப்பூ தூவிவிட வேண்டும்.
மேலும் சுவைக்கு பாதாம், முந்திரி, பிஸ்தாவை சிறு துண்டுகளாக சேர்த்து கொடுத்தால் யம்மியான வெற்றிலை பாயாசம் ரெடி. ஜில்லென்று இருக்க ஐஸ் போட்டும் கொடுக்கலாம்.