உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆடிக்கூழ்!

கோடை காலத்துக்கும், மழை காலத்துக்கும் இடையில் வரும் ஆடியில் வெயிலும், காற்றும் கலந்திருக்கும். இதனால் நோய்கள் பரவும் சூழல் இருக்கும்.

நோயிலிருந்து தப்பிக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், முன்னோர்கள் எடுத்த முயற்சியால் அம்மனுக்கு கூழ் ஊற்றும் வழக்கம் உருவானது.

கூழ் செய்ய தேவையானவை: அரிசி நொய் - ஒரு கைப்பிடி அளவு, கேழ்வரகு மாவு - இரண்டு கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் - 10, தயிர் - ஒரு கப், உப்பு - தேவைக்கு ஏற்ப.

செய்முறை: ஒரு கைப்பிடி அளவு நொய்யை ஒரு டம்ளர் நீர்விட்டு வேகவிட்டு, கேழ்வரகு மாவை, இரண்டு டம்ளர் நீர்விட்டு கரைத்து அதில் சேர்த்து வேகவிடவும்.

பிறகு உப்பு சேர்க்கவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும் தயிரை கடைந்து அதில் சேர்க்கவும்.

குறிப்பு: சின்ன வெங்காயம், மாங்காய், முருங்கைக் கீரை, கருவாட்டு குழம்பு, வற்றல், வடகம் தொட்டு இதை சாப்பிடலாம்.

ஆடி மாதம் அம்மனுக்கு இந்த கூழை செய்து படைத்து, பின் வினியோகிப்பது வழக்கம்.