வெயில் கால அழகு பராமரிப்புகள் சில!

கோடையில், சிறிது நேரம் வெயிலில் சென்று வந்தால் கூட, சருமம் உடனே கருமையடையும். அதனால், நேரடியாக, 'சூரிய ஒளி' நம் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெளியே செல்லும் போது, குடை பிடித்து, தொப்பி மற்றும் குளிர் கண்ணாடி அணிவது அவசியம். வெளியே செல்லும் போது, 'சன் ஸ்கிரீன் லோஷன்' பூசவும்.

வெயில் காலத்தில், 'அல்ட்ரா வயலட்' அதிகமாக வெளிபடுவதன் காரணமாக, முடி நன்கு வளரும். அதேசமயம், வெயிலின் பாதிப்பால், முடியின் நுனி வெடிக்கும்.

இதனால், முடி வளர்ச்சி தடைபடும். இதைத் தவிர்க்க, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சூடுபடுத்தி, தலையில் பூசி மசாஜ் செய்ய வேண்டும்.

வேர்க்குரு பிரச்னை உள்ளவர்கள், நுங்கு தண்ணீரை, உடலில் தேய்த்து, ஊற வைத்து, பின் குளித்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வெயில் காலத்தில், சிலருக்கு தலையில் அரிப்பெடுக்கும். அப்பிரச்னை உடையவர்கள், எண்ணெயை சிறிது சூடாக்கி, தலைக்கு, மசாஜ் செய்யலாம்.

வெயில் காரணமாக, உடலில் அரிப் பெடுத்தால், இரவில், அரை பக்கெட் தண்ணீரில், துளசிப்பொடி, வேப்பிலை மற்றும் மஞ்சள் பொடி கலந்து, காலையில், சிறிது தண்ணீர் சேர்த்து குளிக்கவும்.

வெயிலால் முகம் கறுப்பாவதை தடுக்க, கிர்ணி மற்றும் தர்பூசணிப்பழத்தின் சாறை, முகத்தில் பூசி கழுவலாம். கற்றாழை ஜூஸ் எடுத்து, உடலில் மசாஜ் செய்தால், குளிர்ச்சியாக இருக்கும்.