தூக்கமின்மை பிரச்னை உள்ள பெண்களுக்கு சில தீர்வுகள்...

மாதவிடாய், கர்ப்பகாலம், மாதவிடாய் நின்ற பின், பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளால், துாக்கமின்மைக்கு பெண்கள் எளிதில் ஆளாகின்றனர்.

தைராய்டு பாதிப்பு, அதீத மன அழுத்தம் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய், தவறான துாக்கப் பழக்கம், குடும்பச்சுமை, பணிச்சுமை ஆகியவையும் துாக்கமின்மைக்கு காரணங்கள்.

உடல் பருமன் உள்ள பெண்களிடம், துாக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படுவது அதிகம் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

'ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம்' எனப்படும் நரம்பியல் துாக்கக் கோளாறு இருந்தால், கால்களை நகர்த்த வேண்டும் என்ற கட்டுப்படுத்த முடியாத துாண்டுதலை ஏற்படுத்தும்.

கால்களில் ஏதோ ஊர்வது, பிடித்து இழுப்பது போன்ற சிரமமான உணர்வை தரும்.

இரும்புச்சத்து குறைபாடு, ஹார்மோன் மாற்றங்களால் இது ஏற்படுகிறது. பொதுவாக துாக்கத்தில் தான் இப்பிரச்னை ஏற்படும் என்பதால், அவ்வப்போது விழிப்பு ஏற்படும்.

தினமும் சரியான நேரத்திற்குத் துாங்கச் செல்வது, படுக்கை அறையில், நீல ஒளியை தவிர்ப்பது நல்ல பலன் தரும்.

மேலும் தினசரி உடற்பயிற்சி செய்வது, சரியான உடல் எடையை பராமரிப்பது அவசியம்.

அதேபோல் ரத்த சர்க்கரை, கொழுப்பை கட்டுக்குள் வைப்பது, வளர்சிதை மாற்றத்தை சீராக வைக்க உதவும். இவை எல்லாம் நல்ல தூக்கம் வர செய்யும்.