ரிங்வார்ம் தொற்றை தீவிரமாக்கும் ஸ்டிராய்டு மருந்துகள்

தோல் அரிப்பு எனும் 'ரிங்வார்ம்' பூஞ்சை தொற்று பாதிப்புகள், வழக்கம் போல இந்தக் கோடையிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது, அனைத்து வயதினரையும் பாதிக்கும்.

இது பல வகை பூஞ்சைகளின் கூட்டு பாதிப்பால் வரும் தொற்று நோய். இவ்வகை பூஞ்சைகள், வெப்பமான, ஈரப்பதமான சூழல்களில் வளரக்கூடியவை.

பாதிக்கப்பட்ட நபர், விலங்குடன் நேரடி தொடர்பு கொள்வதாலோ, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை தொடுவதாலோ பரவலாம்.

அதிக வியர்வை, இறுக்கமான, காற்றோட்டமில்லாத ஆடைகளை அணிவது, அழுக்கான ஆடைகள், பல மணி நேரம் ஒரே உள்ளாடைகளை அணிவது...

சுத்தம் செய்யாத உள்ளாடைகளை மீண்டும் பயன்படுத்துவது போன்ற பல காரணிகள், தொற்று அபாயத்தை அதிகரிக்கின்றன.

இது தவிர, கட்டுப்பாடற்ற நீரிழிவு, ரத்தசோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, தொற்று அபாயம் அதிகமுள்ளது.

மார்பு, தொடைகள் போன்ற காற்றோட்டமில்லாத பகுதிகளில் முதலில் சிறிய அரிப்புள்ள திட்டாக தொடங்கி, படிப்படியாக விரிவடைந்து, ஒரு வளைய வடிவ சிவந்த திட்டாக மாறும்.

சில சமயங்களில், உச்சந்தலையைப் பாதிக்கலாம்; இதனால், முடி உதிரும் வாய்ப்பும் உள்ளது. நகங்களை பாதித்து, சேதம், நிற மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

தோலில் அரிப்பு ஏற்பட்டவுடன் பலரும் செய்யும் தவறு, டாக்டரின் பரிந்துரையின்றி, மருந்து கடைகளில் களிம்புகளை வாங்கி உபயோகிப்பது.

இப்படி தரப்படும் மருந்துகள் பெரும்பாலும் நுண்ணுயிர், பூஞ்சை எதிர்ப்பு அடங்கிய ஸ்டிராய்டு மருந்துகள். இவை உடனடி நிவாரணம் தரக்கூடும்.

ஆனால், மருந்தை நிறுத்தியவுடன் தொற்று மீண்டும் தீவிரமாக பரவும். ஸ்டிராய்டு மருந்துகள் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, நோயின் தன்மையை மோசமாக்கும்.

எனவே, தோலில் தடிப்புகள் இருப்பது தெரிந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.