தைப்பூசத் திருவிழா!
தைப்பூசம் என்றதும், நினைவுக்கு வருவது, வடலுார் மற்றும் பழனி. வடலுாரில், தைப்பூச ஜோதி தரிசனக் காட்சியும், பழனியில், தைப்பூசக் காவடி சிறப்பும் பெருமைக்குரியன.
அறியாமையாகிய அக இருளிலிருந்து ஆன்மா, இறைவனாகிய வெளிச்சத்தில் ஐக்கியமாகும் போது, உய்வு பெறும் என்பது, வள்ளலாரின் தத்துவம்.
'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி...' என்பதே, வள்ளலாரின் தாரக மந்திரம்.
ஜோதிப் பிழம்பான சிவபெருமான், தன் நெற்றியின் அக்னி சுடரிலிருந்து முருகனாகிய தீப்பொறியை உண்டாக்கினார்.
இப்படி ஜோதிக்கும், முருகனுக்கும் தொடர்பிருப்பதால் தான், உத்ராயணத் துவக்கமாகிய தைத் திங்கள் கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டது.
தைப்பூசத்தன்று தான், அன்னை உமாதேவி, முருகனுக்கு வேல் தந்து, தாரகனைக் கொன்று வர அனுப்பினார்.
மேலும் தைப்பூசத் திருநாளில் கந்தன் காலடி பணிவோம். எண்ணியன யாவும் ஈடேறப் பெற்று இன்புறுவோம்!