கருத்தரிக்கும் முன் பெண்களுக்கு உண்டாகும் தயக்கமும், சந்தேகங்களும் !
ஆரோக்கியமான வாழ்வு என்பது உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக நடைபோட முடியும். பாலியல் உறவும் இதில் ஒரு அங்கமே.
பாலியல் குறித்த சந்தேகங்களும், தயக்கங்களும் பெண்களுக்கு ஏற்படுவது சாதாரணமானது. ஆனால், பலரும் தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முன்வருவதில்லை.
நாளடைவில் பாதிப்பு அதிகரிக்கும்போது எதிர்பாராத விளைவுகளை எதிர்கொள்கின்றனர். எனவே, முன்கூட்டியே பாலியல் உறவு, உடல்நலம் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வது அவசியம்.
குறிப்பாக, கருத்தரிக்க முயற்சிக்கும் போது பாலியல், இனப்பெருக்க உறுப்பு தொடர்பான பிரச்னைகளை டாக்டர்களிடம் மறைப்பதை தவிர்க்க வேண்டும். அவற்றில் சில...
மாதவிடாய் கால வயிற்று வலி... இது பொதுவான ஒன்றாகும். ஆனால், தொடர்ந்திருந்தால் எண்டோமெட்ரியோசிஸ் அல்லது கருப்பை ஃபைப்ராய்டு பிரச்னைகளுக்கு வாய்ப்புள்ளது.
வலி, அசவுகரியம்... பாலியல் உறவு கொள்ளும்போது தீவிர வலி அல்லது உறுப்பில் வறட்சி, உறவுக்கு பின் பெண் உறுப்பில் ரத்தக்கசிவு இருந்தால், டாக்டரிடம் கலந்தாலோசிக்கவும்.
கட்டி அல்லது வீக்கம்... பிறப்புறுப்பு, அதன் உட்பகுதியில் கட்டி, வீக்கத்தை உணர்ந்தால் தாமதிக்கக்கூடாது. ஹெர்பெஸ் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
வெள்ளைப்படுதல்... இது பெண் உறுப்பை பாதுகாக்கும் ஒன்றாகும். ஆனால், ஒரு சிலருக்கு அதிகமாக இருப்பதுடன் நிறமும் மாறுபடும்; அப்போது உடனடியாக கவனிக்க வேண்டும்.
சிறுநீர், மலம் கசிவு... சிறுநீர் அல்லது மலம் அடங்காமையை அனுபவிப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். தன்மையைப் பொறுத்து சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவர்.