ஆப்போசிசனல் டீபியன்ட் டிசாடர் பிரச்னையிலிருந்து சிறுவர்கள் விடுபட

'அப்போசிசனல் டீபியன்ட் டிசாடர்' என்ற மனப் பிரச்னை ஒரு வகை நோய். இதை தமிழில், 'எதிர்வு பணியாமைக் குறைபாடு' என்பர்.

இந்தியாவில், ஒரு ஆண்டில், 10 லட்சம் சிறுவர்களுக்கு இதுபோல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்களின் பதிவுகள் கூறுகின்றன. இது, சிறுமியரை விட, சிறுவர்களையே அதிகம் பாதிக்கிறது.

இந்த வகையில் மனநோய் பீடித்த சிறுவர்கள், அதிகாரம் படைத்த மூத்தவருக்கு எதிராக, பகைமை, எதிர்ப்பு, கோபம் மற்றும் கீழ்ப்படியாமையை அரங்கேற்றுவர்.

இவ்வகையான மனநோய், மரபியல் ரீதியாகவோ, சுற்றுசூழல் காரணியாலோ உருவாகும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எப்போதும் எரிச்சலான மனநிலையில் இருப்பர், தேவையற்ற வாக்குவாதம் செய்வர், வலிய வந்து தீங்கு செய்ய முயற்சிப்பர், கலகக் குரல் எழுப்புவர்.

மேலும், பழி வாங்கும் குணத்துடன் காணப்படுவர், தன்னைத்தானே காயப்படுத்தி கொள்வர், சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுவர், எப்போதுமே மன பதற்றமுமாய் இருப்பர்.

இந்த மன நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெற்றோர், ஆசிரியர், உடன்பிறந்தவர்கள், தெரு மக்கள் என யாரிடமும் இணைந்து போகமாட்டர்.

சிலருக்கு இப்பிரச்னை சில ஆண்டுகள் நீடிக்கும். சிலருக்கு ஆயுட்காலம் வரை தொடரும். ரத்த பரிசோதனையோ, எக்ஸ்ரேயோ, ஸ்கேனிங்கோ இந்த நோயை உறுதி செய்ய தேவைப்படாது.

குடும்ப அங்கத்தினர் சிகிச்சை, சக குழு சிகிச்சை, அறிவாற்றல் நடத்தை சிகிச்சை மற்றும் சில மருந்துகள் மூலம் உங்கள் மகனை குணப்படுத்தலாம்.

யோகா, தியான வகுப்புகளுக்கு அனுப்புவதன் வழியாக ஒழுங்குபடுத்தலாம். அவ்வப்போது, நீதிக்கதைகள் கூறலாம். இந்த பாதிப்பிலிருந்து வெளிவர மன உறுதியுடன் செயல்படுவது அவசியம்.