உயர் ரத்த அழுத்த தினம் இன்று... உப்பில் கவனம் தேவை !

உயர் ரத்த அழுத்தம் இதய பாதிப்புக்கு வழிவகுக்கிறது. இதை தடுப்பது, முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்துவதை வலியுறுத்தி மே 17ல் உலக ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் 100 கோடி பேர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சராசரி மனிதனின் ரத்த அழுத்தத்தின் அளவு 120/80. உடல் எடையைப் பொருத்து இது மாறுபடும்.

பொதுவாக 130/90 மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம். ஆனால் தற்போது 125/85 மேல் இருந்தாலே அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இது மரபு வழியாக வரலாம். சிறுநீரகக் கோளாறு. நாளமுள்ள சுரப்பிகள் மூலம் சிறுவயதில் ரத்த அழுத்தம் வரலாம். உடல் பருமன், மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் வர வாய்ப்புள்ளது.

குறிப்பாக, உடலிலுள்ள உப்புச்சத்து காரணமாக ரத்த அழுத்தம் மாறுபடும். தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் சுமார் 20 கிராம் உப்பு சேர்க்கிறோம். அது தவறானதாகும்; குறைக்க வேண்டும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைப்பது அவசியம். உணவில் உப்பின் அளவை குறைப்பது நல்லது.

பழங்கள், காய்கறிகள், கீரைகள், நவதானியங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை இருவேளைகளிலும் யோகா, உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்துக்கு உகந்தது.

ரத்த அழுத்தத்தால் சிறுநீரகம், கண், இதயம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். தீடீர் இதய அடைப்பு, வாத நோய், சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். எனவே ரத்த அழுத்தத்தைச் சீராக வைப்பது அவசியமானது.