இன்று உலக ஆமைகள் தினம்... சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
உலகில் 360 வகை ஆமை இனங்கள் உள்ளன. அவற்றில் பல அரிய வகையை சேர்ந்தவை. இவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மே 23ல் ஆமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆமைகள் தங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால், தற்காத்துக்கொள்ள ஓட்டினுள் ஒளிந்து கொள்ளும். மெதுவாக மட்டுமே இயங்கும். 300 ஆண்டுகள் வரை வாழும்.
சூழ்நிலைக்கு ஏற்ப நிலத்திலும், நீரிலும் வாழும் தன்மை கொண்டது. நிலத்தில் வாழும் ஆமைகள் டார்டாய்ஸ் (Tortoise) என்றும், தண்ணீரில் வாழும் ஆமைகள் டர்ட்டில் (Turtle) என்றும் அழைக்கப்படுகின்றன.
கிழங்கு, இலை, தாவரத்தின் தண்டுகளை மட்டுமே இவை உண்ணும். இதில் விதிவிலக்காக ஒருசில வகை கடல் ஆமைகள் மட்டுமே மாமிச உண்ணிகளாக உள்ளது.
குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டாத வரை ஆண், பெண் பாலினத்தை ஆமை இனத்தில் அறிந்து கொள்வது கடினம். ஆமைகள் தொண்டை வழியாக வாசனைகளை நுகரும் தன்மை கொண்டது.
டைனோசர் காலத்தில் வாழ்ந்த ஒரு சில உயிரினங்களின் பட்டியலில் ஆமைகளும் ஒன்று. மிகவும் பழமை வாய்ந்த உரியினமான ஆமை, 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பூமியில் வாழ்ந்து வருகின்றன.
ஒருசில இடங்களில் செல்லப்பிராணிகளாகவும் ஆமைகள் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் வளர்த்து வருகின்றனர். சந்ததி, சந்ததியாக குடும்பத்தில் அவை அங்கம் வகிக்கும்.
அண்டார்டிகா கண்டத்தைத் தவிர்த்து உலகின் அனைத்துப் பகுதியிலும் ஆமைகள் வளர்கின்றன. இந்தியாவில் ஐவகை நிலத்திலும் ஆமைகள் வளரும்.
தனது ஆயுளைக் காக்கும் ஆமை ஓடுகள் ஒரு அமைப்பைக் கொண்டவை கிடையாது. மாறாக 60 எலும்புகளால் ஆனது. இவை தனித்தே செயல்பட விரும்பும். அதிக நேரம் மூச்சுவிடாமல் இருக்கும்.
1835ம் ஆண்டு சார்லஸ் டார்வின் தனது ஆய்விற்காகப் பயன்படுத்திய ஹாரியாட் ஆமை, கடந்த 2006ஆம் ஆண்டு இறந்தது என்றும், 176 ஆண்டுகள் வாழ்நாளைக் கொண்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.