விலங்கினங்கள் கடித்தால் கட்டாயமாக தடுப்பூசி போடணும் !

நாய்க்குட்டி பிறந்த முதலாண்டில், 2 முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். தொடர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறை போட வேண்டும்.

ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும், தடுப்பூசி முறையாக செலுத்தப்படாததால், மனிதர்களை கடிக்கும் போது, ரேபிஸ் தொற்று பரவி, பாதிப்பு ஏற்படுகிறது.

தமிழகத்தில் கடந்தாண்டில் 4.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு கடந்த இரண்டரை மாதங்களில், 1.18 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை, குரங்கு, நரி, கீரி, ஓநாய், வவ்வால் உள்ளிட்ட விலங்கினங்கள் கடித்தவுடன், ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய தடுப்பூசிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாய் போன்ற விலங்குகள் கடித்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள் மற்றும், 28ம் நாள் என, 4 தவணை தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

ஆழமான காயமாக இருந்தால், 'இம்யூனோக்ளோபிலின்' தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது. விழிப்புணர்வு இல்லாததால், முறையாக சிகிச்சை பெறாமல், சிலர் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழக்கின்றனர்.

எனவே, விலங்கினங்கள் கடித்தால், டாக்டரின் ஆலோசனைப்படி முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது பொது சுகாதாரத்துறையினரின் அட்வைஸாகும்.