கோடைக்கு இதமாக மோர் குடிப்பதால்... என்னென்ன கிடைக்கிறது?
கொளுத்தும் கோடையில் பலரும் அதிகமாக விரும்பிச் சாப்பிடும் பானமாக மோர் உள்ளது. நம் உடலில் தண்ணீர்ச்சத்து குறையும் போது, வெயிலின் தாக்கத்தை தவிர்த்து நீரேற்றமாக வைக்க உதவுகிறது.
சர்க்கரை, கஃபைன் பானங்களை விட பல்வேறு ஆரோக்கிய சத்துக்கள் மோரில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதில், வெண்ணெய் நீக்கப்படுவதால் பாலை விட குறைவான கொழுப்பு, கலோரிகள் அடங்கியுள்ளன.
புரதம், கால்சியம், வைட்டமின்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. சீரகம், புதினா, உப்பு சேர்த்து ஒரு கிளாஸ் மோர் குடிக்கும் போது, தாகம் தணிவதுடன் உடலும் குளிர்ச்சியடைகிறது.
மோர், தயிர், உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் கலவையானது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள், திரவங்களின் அளவை சமன் செய்கிறது. உடலை நீரேற்றமாக வைப்பதுடன், நீரிழப்பை தடுக்க உதவுகிறது.
மோரிலுள்ள ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் லாக்டிக் அமிலம் செரிமானத்துக்கு உதவுவதுடன், உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
மலச்சிக்கல் தவிர்க்கப்படுவதுடன், குடல் இயக்கத்தை பராமரிக்கவும், வயிறு தொற்று, லாக்டோஸ் சகிப்புத்தன்மை மற்றும் பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது.
எண்ணெய் மற்றும் காரமான உணவுகளால் அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சீராக்குகிறது.
தொடர்ந்து மோர் குடிக்கும் போது, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்க உதவுகிறது. இதனால், இதய ஆரோக்கியம் சீராக பராமரிக்கப்படுகிறது.
இது வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதால், தேவையற்ற நொறுக்குக் தீனிகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது உகந்த பானமாகும்.