செல்போனை தலையணைக்கு கீழே வைத்து தூங்கினால் என்ன நடக்கும்?

ஸ்மார்ட் போன்கள் ஆபத்தான கதிர்வீச்சை வெளியிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது நம் உயிரியல் கடிகாரத்தின் செயல்முறை அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதனால், நாம் தூங்கும் போது செல்போன் நம் அருகில் இருந்தால், கனவுகள் வருவது, தூங்க முடியாமல் போவது, இரவில் பலமுறை எழுந்திருப்பது போன்றவை ஏற்படலாம்.

மின்னணு சாதனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அவை புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய, நச்சு விளைவுகளை உருவாக்குவதாக உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு, ஆண்களின் மலட்டுத்தன்மைக்கும், உயிரணுக்களின் தரம் குறைவதற்கும் இடையே முக்கிய தொடர்பு இருப்பதை காட்டுகிறது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்கும்போது 'ஆப்'கள் செயல்பாட்டில் இருப்பதாலும், மின்காந்த கதிர்வீச்சை வெளியேறுவதால் போன் சூடாகி, காட்டன் துணிகள், தலையணைகள் எளிதாக தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

மொபைல் போன்கள் சுமார் 900MHz ஒலிபரப்பு சமிக்ஞையால் கதிர்வீச்சை வெளியிடுகின்றன. எனவே, நீண்ட நேரம் தலைக்கு அருகில் வைத்திருப்பது தலைவலி உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

செல்போன்கள், டேப்லெட்டுகள், டிவிகள் மற்றும் பிற கேஜெட்டுகள் அடங்கிய LED திரைகள், நீல ஒளியைக் கொடுக்கின்றன; தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியைத் தடுக்கின்றன.

எனவே, தூங்குவதற்கு 1 அல்லது 2 மணி நேரத்துக்கு முன் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களையும் அணைத்து வைக்கவும். முடிந்தால் அவற்றை வேறொரு அறையில் வைப்பது ஆரோக்கியத்துக்கு சிறந்தது.