அதிகரிக்கும் நீரிழிவு பாதிப்புக்கு காரணமென்ன?

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு உட்பட சமீபத்தில் வெளியான பல ஆய்வுகள், தமிழகத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடையே நீரிழிவு பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறுகிறது.

10 ஆண்டுகளுக்கு முன் வரை, 45 வயதிற்கு மேற்பட்டவர்களே, நீரிழிவு பாதிப்புடன் வருவர். இன்று, 30 வயதிலேயே 2 விதமான நீரிழிவால் பாதிப்படுவது அதிகரித்துள்ளது.

இளம் வயதில் பாதிக்கப்பட்டால், வாழ்நாள் முழுக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். நீண்ட காலம் இருந்தால், கண், கால், சிறுநீரகம் என அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும்.

ஒல்லியான உடல்வாகு இருப்பவர்களுக்கும், அடிவயிற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது.

காரணம், நம் மரபணுவில், அதிகப்படியான கொழுப்பு முதலில் இடுப்பு, வயிற்றை சுற்றியே சேருவதால், நாளடைவில், முழுமையாக இன்சுலின் செயல்படாத நிலை ஏற்படுகிறது.

முன்பெல்லாம் நகர்ப்புறங்களில் மட்டுமே நீரிழிவு இருப்பதாக சொல்வர். இன்று, நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வேறுபாடின்றி, எங்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்தில் ஒருவர், நீரிழிவு பாதிப்புக்கான சிகிச்சை எடுப்பதாக, தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை கூறுகிறது.

பாரம்பரிய இந்திய உணவுகள் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அவை பெரும்பாலும் கார்போஹைட்ரேட் அதிகமாகவும், புரதம் குறைவாகவும் இருக்கின்றன.

அதே நேரத்தில், இதற்கு மாறாக சமச்சீரான உணவுகளுக்கு செலவிடுவதை விட, சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்தி, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் விலை மலிவாக உள்ளது.

குறைந்த உடற்பயிற்சி மற்றும் அதிகரிக்கும் மன அழுத்தத்துடன், இந்த புதிய உணவுப் பழக்கமும் சேர்ந்து, நீரிழிவு பாதிப்பை உண்டாக்குகிறது.

குறிப்பாக, கிராமப்புற பெண்களிடையே இந்த பாதிப்பு வேகமாக அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, துவக்கநிலை பரிசோதனைகள், நீரிழிவு குறித்த புரிதல், ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய அவசரத்தேவை ஏற்பட்டுள்ளது.