பஞ்சு மிட்டாயில் உள்ள நச்சுப் பொருள்.. வேறு எதெதில் உள்ளது?

குட்டீஸ்களுக்கு பிடித்தமான பஞ்சுமிட்டாயில் ரோடமைன் பி என்ற தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருள் இருப்பதால் சமீபத்தில் இதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

ரோடமைன் பி என்பது ஒரு செயற்கை சாயம் ஆகும். இது பளிச் என்ற சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கக்கூடியதாகும்.

இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், உணவுப் பொருட்களில் பயன்படுத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது.

இருப்பினும் அத்துமீறி சிவப்பு, இளஞ்சிவப்பு நிறங்களை தரக்கூடிய ரோடமைன் பி, அந்த நிறத்தில் உள்ள உணவுப் பொருட்களிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்ட ரோடமைன் பி, ரோஸ்மில்க், கொட்டைப் பாக்கு, சிவப்பு முள்ளங்கி போன்றவற்றிலும் சேர்க்கப்படுகிறது.

இதுதவிர மில்க் பேடா என்ற இனிப்பு வகையின் மீது தூவப்படும் இளஞ்சிவப்பு துகள்களிலும் உள்ளது.

சர்க்கரை வள்ளி கிழங்கின் மேற்பரப்பில் சிவப்பு நிறம் கூடுதலாக வெளிப்படுவதற்கு ரோடமைன் பி பயன்படுத்தப்படுகிறது.

மிளகாய் பொடி, கேழ்வரகு, சாஸ் வகைகளிலும் சிவப்பு நிறம் பெறுவதற்காக அத்துமீறி பயன்படுத்தப்படுகிறது.

இது புற்றுநோய் மற்றும் மரபணு பிறழ்வு ஏற்படுத்தக்கூடியது என ஆய்வுகள் கூறுகின்றன. தோல் வியாதிகள், சுவாசம், கல்லீரல், மற்றும் சிறுநீரக பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேப்போல், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரோடமைன் பி சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பாதிக்கிறது.